தமிழ்நாடு (Tamil Nadu)

தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்?

Published On 2024-01-05 05:11 GMT   |   Update On 2024-01-05 06:41 GMT
  • உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
  • அமைச்சராக பொறுப்பெற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை கட்சியின் மூத்த அமைச்சர்கள் அணுகி வருகின்றனர்.

அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும் அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகள் அவரை 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.


அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.

இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடும் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விசயம் கிசுகிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News