தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் பெய்த மழை எவ்வளவு?- கடந்தாண்டு, இந்தாண்டு ஒரு ஒப்பீடு

Published On 2024-10-18 02:57 GMT   |   Update On 2024-10-18 02:57 GMT
  • 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
  • கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிற

சென்னை:

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் சராசரியாக கடந்த 14-ந் தேதி 65.53 மில்லி மீட்டர் மழையும், 15-ந் தேதி 133.46 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஆக மொத்தம் இந்த 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

அதில் 15-ந் தேதி கத்திவாக்கத்தில் 231.9 மி.மீ, மணலியில் 205.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் 200 மி.மீட்டருக்கு குறைவாக தான் மழை பெய்து இருக்கிறது. அதே போல் 14-ந் தேதி 100 மி.மீட்டருக்கு கீழ் தான் மழை பெய்து இருக்கிறது. சென்னையில் 14, 15-ந் தேதிகளில் பெய்த மழை மூலம் மொத்தம் 2.99 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

கடந்தாண்டு மிக்ஜாம் புயல் மூலம் சென்னையில் அதிகளவு மழை பெய்தது. அப்போது டிசம்பர் 3-ந் தேதி 135.9 மி.மீட்டர் மழையும், 4-ந் தேதி 117.73 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த 2 நாட்களில் சராசரியாக 126.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

அதில் கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் 291.6, ஆலந்தூர் - 250, அடையார் - 235.2, மீனம்பாக்கம்-231.5, எம்.ஜி.ஆர். நகர் - 219.6 இடங்களில் மழை பதிவானது. அதே போல் டிசம்பர் 4-ந் தேதி 14 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. அதிகபட்சமாக தண்டையார் பேட்டையில் 250.2, சென்னை கலெக்டர் அலுவலகம் - 247.3, டி.ஜி.பி. அலுவலகம் - 237 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்தது. சென்னையில் 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் மூலம் மொத்தம் 3.82 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

மழையளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்தாண்டு பெய்த மழை தான் பேய் மழை. இந்தாண்டு குறைந்தளவுதான் மழை பெய்து இருக்கிறது. இருப்பினும் கடந்தாண்டு ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இந்தாண்டு மழை ஒரே அளவாக கொட்டாமல் நாள் முழுவதும் சீராக பெய்தது. சீரான மழையும், அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் கைக்கொடுத்ததால் இந்தாண்டு மழை நீர் பெரியளவில் தேங்கவில்லை. ஒரு வேளை கடந்தாண்டு போல் மழை ஒரே நேரத்தில் கொட்டி இருந்தால் பாதிப்பு நிச்சயம் அதிகரித்து இருக்கும்.

Tags:    

Similar News