பெரியபாளையம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது
- ஆரணி ஆற்றில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
- பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய இரண்டும் தண்ணீரில் மூழ்கியது.
இப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கின்றனர்.
மேலும், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், தனியார்-அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களும், விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.
எனவே, அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.