போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்: விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
- படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.
இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-
திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.