தமிழ்நாடு

போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் தடுப்பணையில் அதிக அளவு தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.

2 நாட்களில் 4 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2024-07-17 04:07 GMT   |   Update On 2024-07-17 04:07 GMT
  • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

கூடலூர்:

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 121.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 124.10 அடியாக இருந்தது. இன்று காலை மேலும் 1 அடி உயர்ந்து 125.10 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து 5395 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அணையில் 3640 மி.கன அடி இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.36 அடியாக உள்ளது. அணைக்கு 1671 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2317 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது.

தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் வறண்டு கிடந்த கொட்டக்குடி, மூல வைகை ஆறு, வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி, பீச்சாங்கரை, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

பெரியாறு 30.8, தேக்கடி 18.6, கூடலூர் 6.2, உத்தமபாளையம் 7.6, வைகை அணை 0.4, சோத்துப்பாறை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News