விபத்தை தடுக்க வேப்பம்பட்டில் ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு
- நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.
இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.