தமிழ்நாடு

சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க கொசஸ்தலை, ஆரணி ஆறுகளை இணைக்க புதிய திட்டம்

Published On 2023-06-24 06:55 GMT   |   Update On 2023-06-24 06:55 GMT
  • மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது.
  • 2 ஆறுகளை இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளததில் மிதக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்துவிடப்பட்டது.

மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது. அதன் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு பெய்த கனமழையாலும் சென்னை வெள்ளக் காடானது.

வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் தனித் தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது. எனவே சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வடசென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறுகளில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துைரக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும்.

பஞ்செட்டி வரை கடல்நீர் கிட்டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட்புகுவதை குறைக்க முடியும்.

ஆறுகள் இணையும் இடங்களில் இணைப்பு காய்வாயுடன் அணைகள் கட்டப்பட்டு வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News