தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு வினியோகம் 3 மாதங்களாக தாமதம்- ஒரே வீட்டில் 2 கார்டு கேட்பதால் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-06-16 05:07 GMT   |   Update On 2023-06-16 05:58 GMT
  • ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.
  • உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த மே 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

இதற்கான பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிலும் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். சமையலறை ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா, அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா? என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய கார்டு கிடைப்பதில் 3 மாதம் தள்ளிப்போகிறது.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

அதனால்தான் சமையலறை எத்தனை உள்ளது? எத்தனை சிலிண்டர் இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது? என்ற விவரங்களை சரிபார்க்க சொல்லி உள்ளோம்.

இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News