தமிழ்நாடு

ரவுடி கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுக்கிறார்கள்

Published On 2023-11-15 09:42 GMT   |   Update On 2023-11-15 09:42 GMT
  • சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
  • மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும்.

சென்னை:

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை முன்பு கடந்த மாதம் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கருக்கா வினோத் பின்னணியில் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை அனுப்பினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்ட போது, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் மனுதாக்கல் செய்யப்படும். இதுபற்றி மத்திய உளவுப் பிரிவுக்கு என்.ஐ.ஏ. தெரிவிக்கும். இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற விசாரணை தொடரும். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, ஜெயிலில் அவனிடம் யார்-யார் பழகினார்கள். வெளியில் இருந்து அவனை இயக்கினார்களா? என விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News