நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு
- ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
- கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை, தேனி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:-
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை அந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கென சிறப்பு அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்களும் இருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.