தமிழ்நாடு

வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது சலசலப்பு - நடந்தது என்ன?

Published On 2024-03-25 09:00 GMT   |   Update On 2024-03-25 09:40 GMT
  • வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
  • தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குவாதத்தில் இறுதியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- எங்களுக்கு 12- 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். 12.15 மணிக்கு தான் நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவாக, திமுக வேட்பாளர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

இதனிடையே, வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்கேயும் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வாக்குவாதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். 11.49 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம், கேமராவிலும் அது பதிவாகி உள்ளது. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான போது, திடீரென தி.மு.க.வினர் வந்தனர். மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களை தான் அனுமதித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதம் செய்தனர். பிரச்சனையை காவல்துறை சரியாக கையாளவில்லை. திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்களின் டோக்கன் எண் 7 என்றார்.

Tags:    

Similar News