அகவிலைப்படி உயர்வு சந்தேகங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
- தி.மு.க. அரசின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1971-76-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எட்டு முறை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. இதனை சரி செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கி அவர்களை பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்.
தற்போதைய அகவிலைப்படி உயர்வு ஆணைகள் உரிமையை நிலைநாட்டுவது போல் இல்லை. 'திராவிட மாடல்' என்பதற்கேற்ப தி.மு.க. அரசு எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது தான் கொடுக்கும் என்ற அதிகாரப் போக்கினை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உணர்த்துவது போல் அமைந்துள்ளது.
எம்.ஜி.ஆர். வகுத்த கொள்கையிலிருந்து, புரட்சித் தலைவி அம்மா கடைபிடித்த முறையிலிருந்து வேறுபட்டு புதிய முறையைக் கடைபிடிப்பது என்பது எதிர்காலத்தில் அகவிலைப்படி உயர்வை அபகரிப்பதற்கான, தாமதப்படுத்துவதற்கான ஏற்பாடோ என்ற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.
தி.மு.க. அரசின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மாற்றியமைக்கப்பட்டதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் அதே தேதியிலிருந்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.