தமிழ்நாடு

பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2023-03-05 06:18 GMT   |   Update On 2023-03-05 06:18 GMT
  • தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமையென கருதுகிறேன்.
  • வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்த மளிக்கும் செய்தியாகும்.

இது போன்று வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற வதந்திகள் தமிழ்நாட்டின் தொழில் அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

இந்தத் தருணத்தில், "தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும்" என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமையென கருதுகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தமிழக மக்களின் வளர்ச்சியையும், தொழில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பேணிக்காக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு, பிற மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதையும், வதந்திகள் பரப்பியோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதையும் தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News