ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
- தி.மு.க. அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
- அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.
மேற்படி நிலைமைக்கு காரணம் பள்ளிக் கல்வித்துறைக்கும், நிதித்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாத சூழ்நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும். தி.மு.க. அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.