ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
- ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.
- ஆதார் அட்டை வைத்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படுகின்றன.
சென்னை:
மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை கடந்த 17-ந்தேதி முதல் வழங்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான விவரத்தை அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 15 மண்டலங்களில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 677 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஆதார் அட்டை வைத்து விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படுகின்றன.
அதில் ஏற்கனவே ரேஷன் கார்டு அடிப்படையில் ரூ.6 ஆயிரம் வாங்கியவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும் அவை நிராகரிக்கப்படும். மற்ற விண்ணப்பங்களை அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கள ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறார்கள். இந்த பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீர்நிலைகளை ஒட்டி வசிப்போர், தாழ்வான பகுதியில் மற்றும் 24 மணி நேரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்ற பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் போது தவறான தகவல் பெறப்பட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று பாதிப்பு ஏற்பட்டதா என அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதி எது? பாதிப்பு இல்லாத பகுதி எது என ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்கவோ, நிராகரிக்கவோ செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.