அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி சோதனை செய்த பறக்கும்படை அதிகாரிகள்
- தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
- அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.
அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.