தமிழ்நாடு

மேட்டூர் அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது- 10 பயணிகள் காயம்

Published On 2023-01-30 04:15 GMT   |   Update On 2023-01-30 04:15 GMT
  • மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
  • தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது.

மேட்டூர்:

கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு ஒரு மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி பகுதியை பஸ் கடக்கும்போது, திடீரென அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

இதை பார்த்த டிரைவர் சாலையிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அதற்குள் பஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

அப்போது சில பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த தாமோதரன் (வயசு 38), அவரது மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28) உட்பட 10 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் தீக்காயம் இன்றி தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மற்றும் கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News