10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு- பாடங்களை நடத்தி முடிக்க தனியார் பள்ளிகள் தீவிரம்
- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் முழு அளவில் நடத்தப்படுகின்றன.
- கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இந்த கல்வி ஆண்டில்தான் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதால் பள்ளிகளுக்கு அடுத்து வருகிற நாட்களிலும் விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் இருப்பதால் அவ்வப்போது மாணவர்களுக்கு விடுமுறை விட வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்பதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கருதி ஒருசில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளது.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் முழு அளவில் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இந்த கல்வி ஆண்டில்தான் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் நடத்தப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் பாடப்பகுதிகளை தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தொடர் விடுமுறையால் மாணவர்கள் கற்றல் திறன் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சில தனியார் பள்ளிகள் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.
அண்ணாநகர், முகப்பேர் பகுதியில் உள்ள பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்கி பாடப்பகுதிகளை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கொளத்தூர் எவர்வின் பள்ளிகளின் மூத்த முதல்வர் புருஷோத்தமன் கூறியதாவது:-
பருவமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு கருதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதை பின்பற்றி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மழை பெய்யக்கூடிய நேரத்தில் மாணவர்களின் மனநிலை மாறுபட்டு இருக்கும். ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பருவமழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் விடுமுறை விட வேண்டிய நிலை நீடித்தால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.