தமிழ்நாடு

கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணமா?

Published On 2024-03-25 10:53 GMT   |   Update On 2024-03-25 10:56 GMT
  • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
  • லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அம்பத்தூர்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாடி மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அரியானா மாநிலம் பதிவு எண்கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. லாரியில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தினர். இன்று காலை ஏராளமான தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டெய்னர் பெட்டியை திறந்து சோதனை செய்த போது முதலில் இருந்த சில மூட்டைகளில் பா.ஜனதா கட்சியின் கொடி, தொப்பிகள் இருந்தன. பின்னர் இருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் கண்டெய்னர் பெட்டியை பூட்டினர்.

மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணம் பிடிபட்டு இருப்பதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் பள்ளி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது அதில் இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தேர்தல் அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் கண்டெய்னர் லாரி பற்றிய பரபரப்பு நீடித்து வருகிறது.

இதுகுறித்து கண்டெய்னர் லாரியை சோதனை செய்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். இதற்கிடையே லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News