சேலம் மாவட்டத்தில் பண்ருட்டி பலாப்பழம் விலை 2 மடங்காக உயர்வு
- கடந்தாண்டு ரூ.200 முதல் ரூ.400 வரை விலை போன பலாப்பழங்கள், தற்போது பருமன் மற்றும் தரத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.800 வரை விலை போகிறது.
- முக்கனிகளில் ஒன்றான ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை வாங்கி சுவைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணூர் மலை கிராமங்களில் பலா மரங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்தாண்டு இறுதியில் போதிய மழையில்லாததால், இவ்வாண்டில் பலாப்பழம் விளைச்சல் குறைந்து போனது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பலாப்பழம் அறுவடை தொடங்கியுள்ளது. வாழப்பாடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பண்ருட்டி பகுதிக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் பலாப்பழங்களை கொள்முதல் செய்து சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்து வருகின்றனர். வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வாரச்சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழங்களை தோலுரித்து, பலாச்சுளையை தனியாக பிரித்தெடுத்து ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு ரூ.200 முதல் ரூ.400 வரை விலை போன பலாப்பழங்கள், தற்போது பருமன் மற்றும் தரத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.800 வரை விலை போகிறது. விலை இருமடங்கு உயர்ந்துள்ள நிலையிலும், ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் முக்கனிகளில் ஒன்றான ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை வாங்கி சுவைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வாழப்பாடி பலாப்பழம் வியாபாரி ஒருவர் கூறுகையில்,
நிகழாண்டு சேலம் மாவட்டம் சேர்வராயன்மலை ஏற்காடு, கல்வராயன்மலை கருமந்துறை மற்றும் நாமக்கல் கொல்லிமலை பகுதியில் பருவமழை ஏமாற்றியதால், பலாப்பழம் விளைச்சல் குறைந்து போனது. எனவே, பண்ருட்டி பகுதி கிராமங்களுக்கு சென்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நேரடியாக பலாப்பழம் கொள்முதல் செய்து கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகிறோம்.
பண்ருட்டி பகுதி பலாப்பழம் விலை இந்தாண்டு இரு மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், கல்வராயன்மலை மற்றும் கொல்லிமலை பகுதியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்கு வரத்து குறைந்ததாலும், பண்ருட்டி பலாப்பழங்கள் ருசி மிகுந்து காணப்படுவதாலும், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர்.