தமிழ்நாடு (Tamil Nadu)

மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகம்: பயணிகள் அதிருப்தி

Published On 2023-10-18 06:45 GMT   |   Update On 2023-10-18 06:45 GMT
  • ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சென்ட்ரல் மெட்ரோவில் 4 மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனத்துக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி விட்டு ரெயில்களில் பயணம் செய்கிறார்கள்.

மால்களில் பார்க்கிங் கட்டணம் மூலம் பெரும் தொகையை வாடிக்கையாளர்களிடம் சுருட்டுவதை போல் மெட்ரோ ரெயில் நிர்வாகமும் பார்க்கிங் கட்டணத்தை டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக்கி மணிக்கூர் அடிப்படையிலும் கட்டணங்களை பிடுங்குவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

முன்பு 12 மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம், கார்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்பட்டது. இப்போது அந்த கட்டணத்தை ரூ.30 ஆகவும் ரூ.100 ஆகவும் உயர்த்தி விட்டது. இது தவிர இரவு கட்டணம் இரு மடங்கு, 4 மணி நேரத்துக்கு ஒரு கட்டணம், 8 மணி நேரத்துக்கு ஒரு கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.

அதிலும் ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோவில் 4 மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனத்துக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவைகள். கார்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கூட பார்க்கிங் கட்டணம் கொடுத்து நிறுத்தி விட்டு மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறார்கள். பயணிகள் வருகையை மனதில் கொண்டு தனியார்களை போல் அரசு நிறுவனங்களும் சேவையை மறந்து லாப நோக்கோடு செயல்படுவது பயணிகளை அதிருப்தியடைய வைத்து உள்ளது.

ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் கொடுத்து மோட் டார்சைக்கிளை நிறுத்தி விட்டு ரூ.30 கட்டணத்தில் ரெயிலில் பயணிக்க முடிகிறது. அதற்கு பதில் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இரு சக்கர வாகனங்களிலேயே சென்று விடலாம் என்று பயணிகள் கூறுகிறார்கள்.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் பார்க்கிங் கட்டணத்தை குறைத்து ஒரே சீராக நிர்ணயிக்காவிட்டால் மெட்ரோ ரெயிலுக்கு விடை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை 'ஸ்டார்ட்' செய்து விடுவார்கள். சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போகும்.

Tags:    

Similar News