தமிழ்நாடு

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்புக்கு 1.90 லட்சம் போலீசார்

Published On 2024-04-17 06:33 GMT   |   Update On 2024-04-17 06:33 GMT
  • தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் மீறி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத தொகுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிறகு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை போலீசார் மேற்கொள்கிறார்கள்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரம் போலீசார் இன்று வருகை தருகிறார்கள். இவர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களை தவிர துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாகவே 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில போலீஸ் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களும் இன்று வருகை தருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.

மதுரையில் 511 சாவடிகளும், இதற்கு அடுத்தபடியாக தேனியில் 381 வாக்கு சாவடிகளும் பதற்றமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சாவடிகள் அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.

பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலையில் துணை ராணுவ படையினர் மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் நாளை யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் சந்தேக நபர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

இதற்காக வாகன சோதனை மற்றும் லாட்ஜூகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நாளில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News