தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்களில் குவிந்த மக்கள்: சென்னையில் 45 இடங்களில் ஏற்பாடு

Published On 2023-10-01 06:47 GMT   |   Update On 2023-10-01 06:47 GMT
  • பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.
  • சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சனும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்வதற்காக மக்கள் குவிந்தனர். காய்ச்சலுடன் முகாமுக்கு வந்திருந்த பலருக்கு அது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல் அதிகமாக இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுகாதார துணை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

அதுபோன்ற நபர்களுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் உள்ளது என்று பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

2 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும் காய்ச்சல் முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.

சளித்தொல்லை, இருமலால் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களும் வந்து சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

லேசான காய்ச்சலுடன் வந்தவர்களிடம், 2 அல்லது 3 நாட்கள் வரையில் காய்ச்சல் நீடித்தால் அதன் பின்னரும் காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி காய்ச்சல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று முகாமுக்கு வந்தவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் அது சாதாரண காய்ச்சலா? இல்லை டெங்கு உள்ளிட்ட வேறு வகையான காய்ச்சலா? என்பதை கண்டறிய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் காய்ச்சல் முகாம்களில் உரிய விளக்கம் அளித்து செயல்முறை விளக்கத்தை செய்து காட்டும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

வீடுகளில் உள்ள தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும் என்றும், மொட்டை மாடிகள் மற்றும் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் மழைநீர் தேங்கும் வகையிலான பொருட்கள் கிடந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. சென்னையில் இதுவரை 145 பேருக்கு டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று உள்ளனர், தற்போது 75 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பொது மக்கள் நல்ல தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சென்னையில் கை புகை தெளிப்பான், வாகன தெளிப்பான் மூலமாக கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News