தமிழ்நாடு

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் கவர்னர் மாளிகை கேட்பது என்ன? போலீஸ் சொல்வது என்ன?: மோதல் முற்றுவதால் பரபரப்பு

Published On 2023-10-27 07:16 GMT   |   Update On 2023-10-27 07:16 GMT
  • போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கவர்னர்-தமிழக காவல்துறை இடையே காரசாரமான அறிக்கை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் கவர்னர் கேட்பது என்ன? காவல்துறை தரப்பில் கூறி வரும் விளக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.

* கவர்னர் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளதாகவும், 1-ம் எண் வாயில் வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்து உள்ள காவல்துறையினர் கவர்னர் மாளிகையினுள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய முற்பட்டதாகவும் பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அவதூறாக மிரட்டல் விடுத்து பேசி வருகிறார்கள். தர்மபுரம் ஆதின நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க சென்ற போது கல்-தடியால் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில் கவர்னரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. கவர்னரின் வாகனம் சென்ற பிறகே சிலர் கருப்புக் கொடிகளை சாலையில் வீசினார்கள்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கவர்னர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 124 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூறி இருந்த போதிலும் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாசக்கார செயலாக வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என்று கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்து உள்ள காவல் துறையினர், காவலர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட்டதால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

124 சட்டப்பிரிவு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

* போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள போலீசார் கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News