காவி உடை - ருத்ராட்சம் - துறவி கோலம் - சூரிய வழிபாட்டுடன் தியானத்தை தொடங்கிய மோடி
- சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
- நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார்.
கன்னியாகுமரி:
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார். அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.
பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.
பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.
Kanniyakumari, Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation.
— ANI (@ANI) May 31, 2024
PM Narendra Modi will meditate here till 1st June pic.twitter.com/kcPECWZetA
இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.
பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவி போலவே காட்சி அளித்தார்.
கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார். விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்படி பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தியது, கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டது ஆகியவை வீடி யோவாக இன்று வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
#WATCH | PM Narendra Modi at the Vivekananda Rock Memorial in Kanniyakumari, Tamil Nadu
— ANI (@ANI) May 31, 2024
PM Narendra Modi is meditating here at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/0bjipVVhUw
நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் தியானம் சத்தமில்லாத தேர்தல் பிரசாரமாகவே அமையும். அது கடைசி கட்ட தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற சூழலில்தான் பிரதமரின் தியான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் தியானம் நாளையும் தொடர்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். இதன் மூலம் நாளையும் காலையிலேயே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார். இதன்பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.
Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial in Kanniyakumari, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June. pic.twitter.com/ctKCh8zzQg
— ANI (@ANI) May 31, 2024
பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.