பா.ஜனதா உண்ணாவிரதத்துக்கு சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் அனுமதி
- கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
- வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பல்வேறு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகள், சட்டம்- ஒழுக்கு சீர்குலைவு ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாளை (5-ந் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.
இதேபோல் வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென்சென்னை, தென்சென்னை கிழக்கு, ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகளால் ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றனர்.
இதையடுத்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே நாளை (செவ்வாய்கிழமை) சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.