தமிழ்நாடு

தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

Published On 2023-06-28 09:03 GMT   |   Update On 2023-06-28 09:03 GMT
  • சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்.
  • விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்.

சென்னை:

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

கொடுங்கோலன் நம் ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத் தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News