என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 24-ந்தேதி முதல் மாணவர்கள் பெறலாம்- அமைச்சர் தகவல்
- தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.
- நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 24-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வரும் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளஸ்-2 பரீட்சை முடிவுகளில் யார்-யாரெல்லாம் தேர்ச்சி பெற்றுள்ளனர், யார்-யாரெல்லாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை என்பது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கைதான் முக்கியம். மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். அந்த நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதமே அடுத்த தேர்வை உடனே நடத்தி இந்த கல்வி ஆண்டே மாணவர்கள் உயர் கல்விகு செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். அதற்கு நாங்கள் உறு துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.