தமிழ்நாடு (Tamil Nadu)

ரெட்டேரி மேம்பாலம் அருகே கிரேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2023-06-25 05:30 GMT   |   Update On 2023-06-25 05:30 GMT
  • கிரேன் சக்கரத்தில் சிக்கிய விமலேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • விபத்து தொடர்பாக கிரேன் டிரைவர் நித்தின் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொளத்தூர்:

சென்னையை அடுத்துள்ள மீஞ்சுர் நந்தியம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விமலேஷ்.

25 வயதான இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விமலேஷ் தனது மோட்டார் சைக்கிளில் புழலில் உள்ள நண்பர் திருநேசனின் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர். கோயம்பேட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற இவர்கள் ரெட்டேரி பாலம் வழியாக பயணித்தனர். ரெட்டேரி பாலத்தில் ஏறி இறங்கி பாடி வழியாக கோயம்பேடு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ரெட்டேரி பாலத்தில் ஏறி இறங்கிய சிறிது நேரத்தில் முன்னால் ராட்சத கிரேன் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற விமலேஷ் அதனை முந்திச் செல்ல முயன்றார். இதற்காக மோட்டார் சைக்கிளை விமலேஷ் வேகமாக ஓட்டினார்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் வழுக்கி கீழே விழுந்தது. இதில் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது கிரேன் சக்கரத்தில் சிக்கிய விமலேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்திருந்த திருநேசன் காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விமலேஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக கிரேன் டிரைவர் நித்தின் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News