தமிழ்நாடு

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை: விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2023-08-14 05:29 GMT   |   Update On 2023-08-14 05:29 GMT
  • பயனாளிகளின் இறுதிப் பட்டியலை பொறுத்து பட்ஜெட் நிதி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பணம் பெறப்போகும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு வதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முகாம்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

முதற்கட்ட முகாம் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெற்றது.

2-ம் கட்ட முகாம்கள் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. உரிய நாட்களில் வர இயலாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.

அரசின் இந்த தளர்வு காரணமாக மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு 2023-24-ம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்கனவே 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது.

இப்போது விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கான பட்ஜெட் நிதி அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.

இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் இறுதிப் பட்டியலை பொறுத்து பட்ஜெட் நிதி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்ணப்பிக்கும் பெண்களின் இறுதி எண்ணிக்கைக்கு பிறகுதான் பட்ஜெட் நிதி செலவினத்தை அதிகரிப்பது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது.

அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான செலவினத்தில் அதிகரிப்பு ஏற்பட்டால் 2023-24-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இறுதியாக மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அதை துணை பட்ஜெட்டில் இடம் பெற செய்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 14.36 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 4.04 லட்சம் பேரும் இந்த ஆண்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2.63 லட்சம் பேரும் பயன் அடைந்து உள்ளதாக வருவாய் பேரிடர் தணிப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பணம் பெறப்போகும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News