மதுரை ரெயிலில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சென்னை தம்பதியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு
- 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
- வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
மதுரை:
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ள மன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய அவரை மதுரை ரெயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கினர்.
அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில், போதைப்பொருள் 30 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் மதுரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருடன் தொடர்புகொண்ட ஜேசுதாஸ் என்பவர் போதை பொருளை ரெயிலில் மதுரைக்கு கொண்டு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.
மேலும் 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
இதையடுத்து பிரகாசின் மனைவி மோனிஷா ஷீலாவை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். நேற்று முழுவதும் அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் போதைப்பொருளை கடத்த உத்தரவிட்ட ஜேசுதாஸ் என்பவரும் கைதானார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ், அவரது மனைவி மோனிஷா ஷீலா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.