தமிழ்நாடு

சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: கம்யூனிஸ்டு தேசியத் தலைவர்கள் பங்கேற்பு

Published On 2023-11-16 08:08 GMT   |   Update On 2023-11-16 08:08 GMT
  • சங்கரய்யாவின் மறைவையொட்டி அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
  • ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா 102 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த தகவலை கேள்விபட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சங்கரய்யா உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழிநெடுக பொதுமக்கள் ஏராளமானோர் அவரது உடலை பார்த்து வணங்கினார்கள்.


அடையாறு பணிமனை அருகே பேரணி வந்தபோது கம்யூனிஸ்டு இயக்க தோழர்கள் செஞ்சட்டை பேரணியாக செங்கொடி ஏந்தி நடந்து வந்தனர்.

இந்த பேரணியில் கம்யூனிஸ்டு இயக்க தலைவர்களுடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், இந்துராம், உள்ளிட்ட ஏராளமானோர் நடந்து சென்றனர்.

இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானம் சென்றடைந்ததும் சங்கரய்யா உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் அவரது குடும்பத்தினர் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, கேரள மாநில செயலாளர் கோவிந்தன், மேற்கு வங்காள மாநில செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சங்கரய்யாவின் மறைவையொட்டி அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News