தமிழ்நாடு (Tamil Nadu)

சட்டசபை விதிகளின்படி துணை தலைவர் பதவியே இல்லை- சபாநாயகர் அப்பாவு தெளிவான விளக்கம்

Published On 2022-10-18 06:49 GMT   |   Update On 2022-10-18 06:49 GMT
  • தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும்.
  • மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது என்றார்.

சென்னை:

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விரிவான விளக்கத்தை அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் தரப்பிலும், துணைதலைவர் தரப்பிலும் என்னிடம் வேண்டுகோள் வைத்து என்னிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தபோது அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதின் படி, எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வம் இருந்து வருகிறார்.

இடையில் இடைக்கால பொதுச்செலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் கையெழுத்திட்ட மனுவை என்னிடம் அளித்துள்ளனர். அதில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும், எனவே துணை தலைவர் இருக்கையை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். 9.25க்கு வந்து பார்த்துவிட்டு 9.37-க்குள் இருக்கையை மாற்ற வேண்டும் என கூறுகிறார்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்பது சட்டசபை விதிகளின்கீழ் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டசபை விதிகளின்கீழ் வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

எனவே தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும். மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும் என்னிடம் மனு அளித்துள்ளார். அதில் தேர்தல் ஆணைய பதிவேடுகளில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாகவும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் தற்போது வரை குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்திலும் பொதுச்செயலாளர் தேர்தலை வழக்கு முடியும் வரை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருக்கை விவகாரத்தை பொறுத்தவரையில் பழைய சம்பவம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் கருணாநிதி சட்டசபைக்கு வந்து செல்ல வசதியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என்று சக்கரபாணி மனு அளித்தார். அப்போது அந்த மனு ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால், சட்டசபைக்கு கலைஞர் வந்து சென்றார் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

அதற்காக இதை நான் செய்கிறேன் என்று கருதக்கூடாது. சட்டசபையை பொறுத்தவரையில் பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். அதன்படி 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சபை கண்ணியத்தோடு நடைபெற்று வருகிறது. மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனைவருக்கும் சமமான அனுமதி வழங்கி வருகிறது.

எனவே இருக்கைகள் விவகாரத்தை பொறுத்தவரை யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இன்று அந்த பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

ஜானகி அம்மையார் பதவியேற்றபோது நடந்து கொண்டது போன்றும் கலைஞர் கருணாநிதி கையில் இருந்து பட்ஜெட் உரையை கிழித்து எரிந்ததை போன்றும் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர்.

கேள்வி நேரத்தை நடத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் சபையில் நடந்து கொண்டதை காண முடிந்தது.

இன்று சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் நாம் சபையில் இருந்தால் ஏதேனும் சங்கடம் ஏற்படும் என்று நினைத்து இருக்கலாமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவையும் சபையில் வைக்கப்படுகிறது. இதைக் கண்டும் அவர்கள் அஞ்சி விட்டார்களா என்றும் தெரியவில்லை.

சட்டசபையில் இருந்து தங்களது கருத்துக்களை சொல்லி இருக்க வேண்டிய அ.தி.மு.க.வினர் வேண்டும் என்றே அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News