தமிழ்நாடு (Tamil Nadu)

சட்டசபையில் ஓ.பி.எஸ். இடம் மாற்றப்படுமா?- சபாநாயகர் அப்பாவு நாளை ஆலோசனை

Published On 2022-10-12 05:45 GMT   |   Update On 2022-10-12 05:45 GMT
  • சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் நேற்று வெளியூரில் இருந்ததால் கடிதம் வந்த தகவல் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
  • சபாநாயகர் அப்பாவு தற்போது அவரது தொகுதியில் உள்ளார். நாளைதான் சென்னை வருகிறார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீ்ரசெல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி கொண்டனர்.

இதில் பல பிரச்சினைகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார்.

அது மட்டுமின்றி அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகருக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை நான் கட்சியை விட்டு நீக்கி விட்டேன். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரு கடிதங்கள் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டதால் இது பற்றி சபாநாயகரிடம் கடந்த மாதம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளித்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது சொன்ன கருத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அதாவது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எந்த ஒரு பதிலும் இப்போது சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பதிலை திரும்ப கூறினார்.

அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே சமயம் பழைய நடைமுறை தொடரும் என்று ஒரு போதும் கூறியது இல்லை.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் என்பது அவர்களின் கட்சி சார்ந்த பிரச்சினை.

எனவே யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன். சட்டமன்றம் வேறு. நீதிமன்றம் வேறு. எனவே சட்டமன்றத்துக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த சூழலில் வருகிற 17-ந்தேதி தமிழக சட்டசபை கூடுவதால் அன்றைய தினம் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படுமா? அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிப்பாரா? என்பது தெரிய வரும்.

ஏனென்றால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில்தான் இதுவரை ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.

தற்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக ஆகி விட்டதால் இருவரும் அருகருகே அமர்ந்து சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து விடலாம் என்று தலைமைக் கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் எனவே சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதுபற்றி தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் பற்றி தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி உடனே இதற்கு பதிலடியாக இன்னொரு கடிதத்தை அ.தி.மு.க. சட்டமன்ற துணை கொறடா அரக்கோணம் ரவி மூலம் நேற்று மதியம் சபாநாயகர் அலுவலகத்தில் கொடுக்க வைத்தார்.

அந்த கடிதத்தில் சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடும் போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் நேற்று வெளியூரில் இருந்ததால் இந்த கடிதம் வந்த தகவல் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு தற்போது அவரது தொகுதியில் உள்ளார். நாளைதான் சென்னை வருகிறார். அவர் நாளை வந்ததும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பு கடிதங்களையும் படித்து பார்த்து பரிசீலித்து விறுப்பு வெறுப்பின்றி முடிவு எடுப்பார் என்று சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டசபையில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படவில்லை என்றே தெரிகிறது. அப்படிபட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க. பிளவுபட்டு விட்டதால் இரு தலைவர்களையும் சட்டசபையில் அருகருகே அமர வைப்பது நாகரீகமாக இருக்காது என்ற காரணத்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில் முன்வரிசையில் வேறு இடத்தில் இடம் ஒதுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்துள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நினைக்கின்றனர். அதற்கேற்ப கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பது 17-ந்தேதிதான் தெரிய வரும்.

அதை பொறுத்துதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் சட்டசபையில் அமையும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News