தமிழ்நாடு

ஷவர்மா சாப்பிட்ட மாணவி மரணம்: 'பாஸ்ட்புட்' கடைகளில் அதிகாரிகள் சோதனை

Published On 2023-09-20 08:44 GMT   |   Update On 2023-09-20 08:44 GMT
  • ஷவர்மா சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

திருவள்ளூர்:

நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 'ஷவர்மா' சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார துறையினர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

ஜெ.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை உள்ளிட்ட 'ஷவர்மா' கடையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர்.

இதில் ஒரு கடைக்கு நகராட்சியின் அனுமதி பெறவில்லை என்று கூறி சீல் வைத்தனர். மேலும் மூன்று கடைகளுக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கடையில் உள்ள இறைச்சியினை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் சோதனை செய்ததில் அதில் அளவுக்கு மீறி கலர் சேர்த்தும், ஏற்கனவே வேக வைக்கப்பட்ட இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்ததும் கடையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 கடைகளுக்கும் 'நோட்டீஸ்' அளித்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பாஸ்ட் புட் உணவகம், 'ஷவர்மா' கடைகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 55 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஷவர்மா மற்றும் அசைவ உணவகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 28 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன உணவு வகைகளை பறிமுதல் செய்தனர். 23 உணவகங்களில் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. 3 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News