தமிழ்நாடு

தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை: காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

Published On 2023-06-18 09:38 GMT   |   Update On 2023-06-18 09:38 GMT
  • மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.
  • மீன்விற்பனை களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராயபுரம்:

தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து 14-ந்தேதி நள்ளிரவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் புறப்பட்டனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க அதிக அளவிலான மீன்பிரியர்கள் குவிவார்கள். மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீன்பிடி தடைகாலம் முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவிலான பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேட்டில் ஏராளமான மீன்பிரியர்கள் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் கூட்டம் அலை மோதியது. மீன்விற்பனையும் களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இன்று குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது. பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும் மற்ற வகை மீன்கள் அதிகம் குவிந்து இருந்ததால் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். எனவே அடுத்த வாரத்தில் பெரும்பாலாள விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிகஅளவில் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் தெரிகிறது.

காசிமேட்டில் இன்று காலை வஞ்சிரம் கிலோ ரூ. 950-க்கும், சங்கரா ரூ.700, இறால் ரூ.600, வவ்வால் மீன்-ரூ.300 முதல் ரூ.600 வரை, கடமான் ரூ.600, பாறை ரூ.350-க, நெத்திலி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News