தமிழ்நாடு (Tamil Nadu)

நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-05-30 07:53 GMT   |   Update On 2024-05-30 07:53 GMT
  • அரசியல் ஆரவாரங்கள், அதாவது தேர்தல் ஆரவாரங்கள் முடித்து அமைதியாக தியானம் செய்வதை, தேர்தல் விதிமீறல் என எதிரணியினர் கூறுகின்றனர்.
  • தவம், தியானம் என்பது நம் தமிழ்க்கலாச்சாரத்தின் அங்கம்.

சென்னை:

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தவம் ஓர் ஆன்மீகக்கலை. அதை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் பிரதமர் மோடி குமரியைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும். அதுவும் நம் அன்னை குமரி அன்னை தவம் செய்த பாறை, வீரத்துறவி விவேகானந்தர் தவம் செய்த பாறையை தேர்ந்தெடுத்து ஆரவாரமான அலைகளுக்கு நடுவில் அமைதியாக நம் நாட்டின் நலனுக்காக தியானம் செய்ய இருக்கிறார்.

அரசியல் ஆரவாரங்கள், அதாவது தேர்தல் ஆரவாரங்கள் முடித்து அமைதியாக தியானம் செய்வதை, தேர்தல் விதிமீறல் என எதிரணியினர் கூறுகின்றனர். இது எவ்வளவு அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். காங்கிரசின் ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று. ஏன் ஸ்டாலின் கொடைக்கானல் பயணத்தின் போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

ஆனால் இன்றோ பரிசோதனைக்கு பின்பு மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதமரின் இந்த வருகை, இந்த செய்கை எப்படி இந்த உலகிற்கு நம் தவத்தின் வலிமையை உணர வைக்கப்போகிறது என்பதை உணர வேண்டும். தவம், தியானம் என்பது நம் தமிழ்க்கலாச்சாரத்தின் அங்கம்.

ஆக ஒரு பிரதமர் தமிழ்க்கலாச்சாரத்தின் ஓர் ஆன்மீக அனுபவத்தை அனுபவிக்க வருகிறார் என்றால் அது உலகறியப்பட இருக்கிறது என்றால் நாம் பெருமைப்பட வேண்டும்.

தவம் பற்றி திருக்குறள் பேசுகிறது. சங்க நூல்கள் பேசுகிறது. நம் தமிழ் சித்தர்கள் அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள். செய்க தவம் என பாரதி சொல்கிறார். அது மட்டுமல்ல எதிரணியினர் சொல்கிறார் கவலையினால் தியானம் செய்ய வருகிறாராம். நம் ஆன்மீகம் சொல்கிறது மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரே ஆனந்தமாக தியானத்தில் ஈடுபட முடியும்.

நாம் பல திட்டங்களை இந்த நாட்டிற்கு கொடுத்திருக்கிறோம். இன்னும் கொடுக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என ஊழலின் பல முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் அணியை எதிர்த்து ஒருமுகமாக தியானம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் இந்த பாரத தேசத்தில் 140 கோடி மக்களும் தன் குடும்பம் என அவர்களின் முன்னேற்றத்திற்காக தவம் செய்யும் பிரதமரைப் பெற்றது நாம் பெற்ற தவம் என்பதை நாட்டு மக்கள் உணர்வார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News