தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரித்த பீகார் குழுவினர்

Published On 2023-03-06 05:14 GMT   |   Update On 2023-03-06 05:14 GMT
  • பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • பீகார் மாநில குழுவினர் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடந்த சில நாட்களாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில அரசு அதிகாரிகள் குழு தமிழகத்துக்கு வந்துள்ளது.

பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை அந்த குழு நேரில் சந்தித்து கலந்துரையாடியது.

அதன்படி திருப்பூர் அருகே அருள்புரத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அந்த குழுவினர் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் அங்கிருந்தனர்.

பீகார் மாநில குழுவினர் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது "வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் அச்சமடைய தேவையில்லை. தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பை அளிக்கும் என உறுதி கூறியுள்ளனர்.

இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சிறப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர் என்று பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் பீகார் மாநில குழு தலைவர் பாலமுருகன் தொழிலாளர்களை தனியாக அழைத்து சென்று அவர்களது சம்பள விவரம், விடுதியில் தங்க போதுமான வசதிகள் இருக்கிறதா, பாதுகாப்பாக இருக்கிறார்களா எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் தைரியமாக கூறுங்கள் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என கேட்டறிந்தார்.

அதற்கு வட மாநில தொழிலாளர்கள், தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்புடன் இருக்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News