தமிழ்நாடு

கடமலைக்குண்டு அருகே ரூ.15 லட்சத்தில் தந்தைக்கு சிலை வடித்த மகன்கள்- தாயின் ஆசையை நிறைவேற்றினர்

Published On 2022-07-18 04:24 GMT   |   Update On 2022-07-18 04:25 GMT
  • கடமலைக்குண்டு அருகில் உள்ள கொம்புக்காரன் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு.
  • கணவரின் உருவ சிலையை கண்ட பிச்சையம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

வருசநாடு:

தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தைக்கு ரூ.15 லட்சத்தில் மகன்கள் வெண்கல சிலை அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள கொம்புக்காரன் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. விவசாயி. இவரது மனைவி பிச்சையம்மாள். இவர்களுக்கு பெரிய ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தோட்டத்து வீட்டில் ஒற்றுைமயாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு ராமு திடீரென உயிரிழந்தார்.

அந்த குடும்பத்திற்கே ஆணி வேராக இருந்த தனது கணவரின் இறப்பு மனைவி பிச்சையம்மாளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. தான் வாழும் வரையிலும் தனக்கு பிறகும் தனது கணவர் இதே இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தனது மகன்களிடம் தெரிவித்தார்.

தனது தாயின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய மகன்கள் 2 பேரும் கொம்புக்காரன்புலியூர்-மேலப்பட்டி செல்லும் சாலை அருகே தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் விவசாயி ராமுவுக்கு வெண்கல சிலை அமைத்தனர்.

இந்த சிலை திறப்பு விழா உறவினர் புடைசூழ நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராம மக்களும் கலந்து கொண்டனர். கணவரின் உருவ சிலையை கண்ட பிச்சையம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த தோட்டத்தையே கணவர் கோவிலாக மாற்றி தினமும் வழிபட போவதாக பிச்சையம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News