தமிழ்நாடு

அம்பேத்கர் சிலைக்கு விபூதி: பா.ஜ.க. மீது டி.ஜி.பி.யிடம் திருமாவளவன் பரபரப்பு புகார்

Published On 2023-02-27 08:03 GMT   |   Update On 2023-02-27 08:03 GMT
  • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
  • திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று மதியம் சந்தித்தார்.

அப்போது அவர் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி மனு ஒன்று அளித்தார். பின்னர் அவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்பினர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அதுதொடர்பாகவும் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தேன்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். திருவள்ளுவர், பெரியார் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சமூகநீதி பயணம் மேற் கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை மறித்து திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேலும் அந்த வகையிலான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆரணியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு காரணமாக தனிப்படைகள் அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கைது செய்துள்ளனர். இதேபோன்று திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட விமர்சனங்களுடன் ஆபாசமாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருகிறார்கள். எனவே அந்த கட்சியினரின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

வட மாநிலங்களில் இது போன்ற அவதூறு பிரசாரங்கள் மூலமாக அவர்கள் ஆதாயம் தேடியதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News