உடுமலை திருமூர்த்தி அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
- வழக்கமாக காண்டூர் கால்வாயில் வினாடிக்கு 1200 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் போது தான் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும்.
- இந்த ஆண்டு கோடை மழையின் காரணமாக நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.7 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் உடுமலை நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. பரம்பிக்குளம் அணையில் திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதுவே அணைக்கு வரும் பிரதான நீர்வரத்து பகுதியாகும். இது தவிர திருமூர்த்திமலையில் பெய்யும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவி வழியாக பாலாற்றில் கலந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது.
தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் பாலாற்று வழியே நீர்வரத்து அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் அறவே நீர்வரத்து இருக்காது. காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணிகள் நடப்பதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் 20 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்தநிலையில் கோடை மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்தது. இதையடுத்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. கடந்த 3 நாட்களில் நீர்மட்டம் சுமார் 10 அடி வரை உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையில் தற்போது நீர்மட்டம் 29.75 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் பாலாறு வழியாக வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக 26 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வழக்கமாக காண்டூர் கால்வாயில் வினாடிக்கு 1200 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் போது தான் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும். இந்த ஆண்டு கோடை மழையின் காரணமாக நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.