தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு விரைவு பஸ் மோதியதில் கவிழ்ந்த சொகுசு பஸ்- 5 பயணிகள் காயம்

Published On 2023-06-05 04:30 GMT   |   Update On 2023-06-05 04:30 GMT
  • சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
  • தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

நெல்லை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு அரசு விரைவு போக்குவரத்துக்கழக சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சின் பின்புறம் மற்றொரு அரசு சொகுசு பஸ் நெய்வேலியில் இருந்து குமரிக்கு வந்து கொண்டிருந்தது. தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது நெய்வேலியில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற விரைவு பஸ்சை முந்திச்செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ஊட்டி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் ஊட்டி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. பின்னர் சாலையோரம் இருந்த தனியார் பள்ளி காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதில் பின்னால் வந்த நெய்வேலி பஸ்சின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.

இந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.போலீசார் மற்றும் அப்பகுதியில் இருந்து வந்த மக்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்ளை மீட்டனர். அந்த பஸ்சில் பயணித்த 33 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி தச்சநல்லூர் கரையிருப்பு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News