தமிழ்நாடு

மின் வயர் மீது பேனர் விழுந்த காட்சி


சூறைக்காற்றுடன் மழை- மின்கம்பத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விடிய, விடிய மின் தடையால் கிராம மக்கள் தவிப்பு

Published On 2023-06-06 07:09 GMT   |   Update On 2023-06-06 07:09 GMT
  • திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
  • மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர்:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் கிழிந்து பறந்தன. சில இடங்களில் மின் கம்பங்களில் கிழிந்த பேனர்கள் தொங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் பயணித்தனர்.

மேலும் சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. திருவள்ளூர் பகுதியில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மாலை 6 மணிக்கு சீரானது. ஆனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்த கிராமங்களில் விடிய, விடிய மின்தடையால் பொது மக்கள் தவித்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News