தமிழ்நாடு

5 தொகுதிகளை 15 பேர் கேட்பதால் காங்கிரஸ் வேட்பாளர்கள் முடிவில் தாமதம்- இன்று மாலை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு

Published On 2024-03-23 08:18 GMT   |   Update On 2024-03-23 08:18 GMT
  • திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
  • முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.

திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.

ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.

எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.

புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.

கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.

கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.

இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.

முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

Tags:    

Similar News