தமிழ்நாடு

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ரூ.1055 சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்

Published On 2022-09-02 07:36 GMT   |   Update On 2022-09-02 07:36 GMT
  • சென்னையில் இருந்து கோவை செல்ல 505 கி.மீ ஆகும். இந்த வழியில் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன.
  • சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு இதுவரை ரூ.580 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி கோவை செல்ல ரூ.695 கட்டணம் செலுத்த வேண்டும்.

சென்னை:

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி, செப்டம்பர் 1-ந்தேதி ஆகிய 2 கட்டங்களாக கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

விக்கிரவாண்டி, கொடைரோடு, மனவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நத்தக்கரை, பாளையம், வீரசோழபுரம், எலியார்பதி, பொன்னம்பலபட்டி உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வின் படி கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் ரூ.90-ல் இருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பலமுறை சுங்கச்சாவடிகளை கடக்க வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் கூடுதலாக ரூ.115 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்ல 505 கி.மீ ஆகும். இந்த வழியில் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு இதுவரை ரூ.580 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி கோவை செல்ல ரூ.695 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.115 கூடுதலாக செலுத்த வேண்டும். இதேபோல் சென்னை-நாகர்கோவில் இடையே உள்ள தூரம் 705 கி.மீ ஆகும்.

இந்த வழியில் ஏற்கனவே 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாகர்கோவில் செல்ல இதுவரை ரூ.955 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி சுங்க கட்டணமாக ரூ.1055 செலுத்த வேண்டும்.

சென்னை-மதுரை இடையிலான தூரம் 462 கி.மீ ஆகும். இந்த வழியில் 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்ல இதுவரை ரூ.585 சுங்ககட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.645 செலுத்த வேண்டும்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு 346 கி.மீ தூரம் ஆகும். இந்த வழியில் 7 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ஏற்கனவே ரூ.430 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.460 கட்டணம் செலுத்த வேண்டும்.

கல்லக்குடி சுங்கச்சாவடி கடந்த மே மாதமும், மண கெதி சுங்கச்சாவடி கடந்த ஜூன் மாதமும் செயல்பட தொடங்கியது. இந்த சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்க தொடங்கவில்லை. இதே போல் மணவாளநல்லூர் சுங்கச்சாவடியிலும் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்களும், வணிகர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News