மக்கள் மீது கூடுதல் சுமையை திணிக்க முயற்சிப்பதா?- அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
- பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிலங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியது போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுவும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது என்பது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்றும், எந்தவிதமான கட்டண உயர்வையும் அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சரை தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.