தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

Published On 2022-10-19 09:49 GMT   |   Update On 2022-10-19 09:49 GMT
  • சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார்.
  • அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணி திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி வழியில் பேரணி நடத்திய போது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.

அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், நான் தெரிவித்து இருந்தேன்.

தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தை தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி.ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது. எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை.

சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News