உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி: தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது- வானதி சீனிவாசன்
- தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார். தி.மு.க.வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.
தி.மு.க.வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை தி.மு.க. பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.
திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் தி.மு.க. அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.