தமிழ்நாடு

வாழப்பாடி பகுதியில் 4 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது

Published On 2023-06-08 05:01 GMT   |   Update On 2023-06-08 05:01 GMT
  • வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
  • திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.

அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News