புறாக்கள் தொல்லையால் கணவனை பிரிந்து சென்ற மனைவி
- பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
- பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்தப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழிக்கின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.
புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளுடன் என்னைப் பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.